பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்..... கட்டுப்பாடுகள் விதித்த பிரிட்டன்!

 உலகம் முழுவதும் கோவிட் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அண்மையில்தான் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தச் செய்தியால் கொஞ்சம் நிம்மதி அடைந்திருந்தவர்களுக்குத் தற்போது உலக சுகாதார நிறுவனம் (WHO) அளித்திருக்கும் செய்தி சிறு அச்சத்தை உருவாக்கியுள்ளது.


இங்கிலாந்தில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் புதிய வகையைச் சேர்ந்ததாக இருக்கிறது என்னும் இந்த அறிக்கை பலரையும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது. கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்ததை அடுத்து இன்று முதல் இங்கிலாந்தில் புதிய கட்டுப்பாடுகளை அந்த அரசு விதித்துள்ளது.

இதற்கு காரணம் தற்போது பரவி வரும் புதிய கொரோனா வைரஸின் தன்மையே என்கிறார் இங்கிலாந்தின் சுகாதாரத் துறைச் செயலாளர் ஹேன்காக். நேற்று இங்கிலாந்து எம்.பி.களின் அவையில் பேசிய அவர், ``இங்கிலாந்தில் வேகமாகத் தொற்று பரவுவதற்குப் புதிய வகை கொரோனா வைரஸே காரணம்” என்று குறிப்பிட்டார். இதையொட்டி புதிய கட்டுப்பாடுகள் இங்கிலாந்தில் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்துப் பேசியிருக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் செயல் இயக்குநர் மைக்கேல் ரேயான், ``புதிதாக கொரோனா வைரஸின் மரபணுவில் மாற்றங்கள் காணப்படுகின்றன. இந்த வைரஸ் இங்கிலாந்தில் ஆயிரம் பேரிடம் காணப்படுகிறது. இதுபோன்று மாற்றமடைந்த வகைகள் பலவற்றைக் கண்டிருக்கிறோம். வைரஸ் நாளுக்கு நாள் பரிணாமம் கொண்டு மாறிக்கொண்டேயிருக்கிறது. இங்கிலாந்தில் காணப்படும் இந்தப் புதியவகை, புதிய சிக்கல்கள் ஏதும் உருவாக்கும் என்பதற்கான ஆதாரம் இதுவரை இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்தப் புதிய வகை வைரஸ் 70 சதவிகிதம் அதிகமாகப் பரவும் தன்மைகொண்டிருக்கிறது என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும், நிலைமை கைமீறிவிட்டதாக பிரிட்டனின் சுகாதாரச் செயலர் கூறியிருக்கிறார்.

பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் பிரிட்டனிலிருந்து வரும் விமானம் மற்றும் கப்பல்களுக்குத் தற்காலிகத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளன. இந்தநிலை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அவசரக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், உயர்மட்ட அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


இது குறித்துப் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ``புதிய கொரோனா வைரஸ் குறித்து அரசு முழுமையான எச்சரிக்கையுடன் இருக்கிறது. மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான அனைத்துவகையான நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துவருகிறோம். என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாங்கள் நன்கு அறிவோம். நீங்கள் யாரும் அச்சம்கொள்ளத் தேவையில்லை என்றுதான் நான் கூறுவேன்" என்றார்.

இங்கிலாந்திலிருந்து வரும் அனைத்து விமானங்களையும் தடை செய்யுமாறு மத்திய அரசிடம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியிருக்கிறார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ``இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவிவருகிறது. இது மிகவும் வேகமாகப் பரவக்கூடியது (சூப்பர்-ஸ்ப்ரெடர்). இங்கிலாந்திலிருந்து வரும் அனைத்து விமானங்களையும் தடைசெய்யுமாறு மத்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில் மத்திய அரசு, பிரிட்டனிலிருந்து விமானங்கள் இந்தியா வர தடை விதித்திருக்கிறது. டிசம்பர் 31 வரையில் இந்தத் தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

புதியது பழையவை