வியாழனும் சனியும்.... வானியல் அதிசயம்...

 இந்த நிகழ்வின் இன்னொரு சிறப்பு இது இரவில் நடக்கப்போகிறது என்பதுதான். இது 800 ஆண்டுகளாக நடந்ததில்லை என்கின்றனர். இரு கோள்களுமே பிரகாசமானவை என்பதால் இரவு வானில் வெறும் கண்களாலேயே அவற்றை உங்களால் பார்க்க முடியும்.

சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய கோள்களான சனியும், வியாழனும் மிக அருகில் இன்று இரவுக் காட்சி தரும். இப்படியான நெருக்கத்தில் இந்த கோள்கள் பார்க்கப்பட்டு சுமார் 400 ஆண்டுகளாகிறது. "Great Conjunction" அல்லது "Christmas Star" என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வை இன்று (டிசம்பர் 21) உலகமெங்கும் இருந்து பார்க்க முடியும்.
 

"Conjunction" என்பது பொதுவான ஒரு பெயர்தான். வானில் கோள்கள் அல்லது சிறுகோள்கள் (Asteroids) நெருக்கமாகக் காணப்பட்டால் அதை Conjunction என்பார்கள். உதாரணத்திற்கு 2005-ல் திங்கள், செவ்வாய், சனி ஆகிய மூன்று கோள்கள் மிக அருகில் காட்சி தந்தன. நீட்டிய கைகளில் கட்டை விரலால் மறைத்துவிடும் அளவுக்கு வானில் மூன்றுமே மிக அருகிலிருந்தன. இதற்கு முன்பு நடந்த முக்கிய Conjunction நிகழ்வாக அதைச் சொல்லலாம். சனியும், வியாழனும் மிகப்பெரிய கோள்கள் என்பதால் இவை இரண்டும் நெருக்கமாகத் தெரிவதை "Great Conjunction" என்று அழைக்கின்றனர்.


இந்த "Great Conjunction" 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும். காரணம், இரண்டு கோள்களும் சூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரம்தான். வியாழன் சூரியனை முழுவதுமாக சுற்றிவர 12 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும். அதே நேரத்தில் சனிக்குச் சூரியனை முழுவதுமாக சுற்றிவர சுமார் 30 ஆண்டுகளாகும். சூரியனிலிருந்து மிகத் தொலைவில் இருப்பதால் அதன் புவி ஈர்ப்பு விசை என்பது சனியின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. இதனால் மிகவும் மெதுவாகவே சூரியனைச் சுற்றிவரும் சனி. மிகத் தொலைவில் இருப்பதால் சனியின் சுற்று வட்டப் பாதையும் பன்மடங்கு பெரிதானதாக இருக்கிறது.

இப்படி வேறுபட்ட நேரத்தில் சூரியனைச் சுற்றிவருவதால் 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை, சனியை ஓவர்டேக் செய்யும் வியாழன். இந்த நேரத்தில் இரண்டு கோள்களும் இடைப்பட்ட தூரம் லட்சக் கணக்கான கிலோமீட்டர்கள் இருந்தாலும் பூமியிலிருந்து பார்க்கும்போது இரு கோள்களும் அருகருகே இருப்பது போலத் தெரியும். இதைத்தான் 'Great Conjunction' என்கின்றனர்.

இந்த டிசம்பர் மாத தொடக்கத்திலிருந்தே வியாழன் சனிக்கு அருகில் வந்துகொண்டிருப்பதை வானில் பார்த்திருக்க முடியும். இன்றைய தினம் சனியை, வியாழன் முந்தி செல்லும். அப்போது 400 ஆண்டுகளில் இல்லாத அளவில் அருகருகே இருக்கும் இந்த கோள்கள். பூமியிலிருந்து பார்க்கும்போது இரு கோள்களுக்கும் இடையே ஒரு டிகிரிக்கும் குறைவான (கிட்டத்தட்ட 1/10 டிகிரி அல்லது 6.1 arcminutes) இடைவெளியே இருக்கும். அதாவது கிட்டத்தட்ட இரு கோள்களும் ஒரே கோளாகத் தெரியும். கடைசியாக 1623-ம் ஆண்டில்தான் இந்த அளவு நெருக்கத்தில் இரு கோள்களும் தெரிந்தன.

இந்த நிகழ்வின் இன்னொரு சிறப்பு இது இரவில் நடக்கப்போகிறது என்பதுதான். இது 800 ஆண்டுகளாக நடந்ததில்லை என்கின்றனர். இரு கோள்களுமே பிரகாசமானவை என்பதால் இரவு வானில் வெறும் கண்களாலேயே அவற்றை உங்களால் பார்க்க முடியும். மற்றுமொரு ஆச்சர்யமாக இந்த வருடம் இந்த நிகழ்வு 'Winter Solstice' நாளான டிசம்பர் 21 அன்று இது நடக்கவிருக்கிறது.

அது என்ன Winter Solstice? பூமத்திய ரேகைக்கு மேல் இருக்கும் பகுதிகளில் இன்றுதான் இருப்பதிலேயே மிகவும் குறைந்த நேரம் சூரிய ஒளி கிடைக்கும். அதனால்தான் இதை Winter Solstice என அழைக்கின்றனர். பூமத்திய ரேகைக்கு மேல் இருக்கும் பகுதிகளில் தெற்கு அரைக்கோள பகுதிகளில் இருப்பதிலேயே அதிக நேரம் இன்று சூரியன் தென்படும். இதை Summer Solstice என்கின்றனர்.


எங்கு, எப்படிப் பார்க்க முடியும்?


அன்டார்டிகாவில் இன்று முழுவதுமே சூரியன் தென்படும் என்பதால் அங்கு மட்டும்தான் இந்த 'Great Conjunction' நிகழ்வைப் பார்க்க முடியாது. மற்ற அனைத்து பகுதிகளிலும் மேகங்கள் மறைக்கவில்லை என்றால் இரு கோள்களையும் உங்களால் பார்க்க முடிய வேண்டும்

நல்ல திறந்தவெளியில் முழு வானம் தெரியும் பூங்கா போன்ற பகுதிகளுக்குச் செல்லுங்கள். சூரியன் மறைந்து 45 நிமிடத்திலிருந்து 1 மணிநேரத்தில் தென்மேற்கு வானைப் பாருங்கள். வியாழன் பிரகாசமாகத் தெரியும். சனி சற்றே தொய்வுற்று வியாழனுக்கு மேல் இடதுபுறத்தில் இருக்கும்.
நாசா
இந்தியாவில் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை இது தெரியும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

 

மேலும் பார்க்க நீளமான ஒரு நட்சத்திரம் போன்று காட்சியளிக்கும் என்கிறது நாசா. சில ஆய்வாளர்கள் இது இரட்டை கோள்களாகவே காட்சியளிக்கும் என்கின்றனர். பல விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களும் கோளரங்கங்களும் இந்த நிகழ்வை தொலைநோக்கி மூலம் நேரில் பார்க்கவும், அதை லைவ் ஸ்ட்ரீம் செய்யவும் ஏற்பாடு செய்திருக்கின்றன. தொலைநோக்கி மூலம் பார்க்கும் போது வியாழனின் நான்கு நிலவுகளும் தெரியும்.

அடுத்து மீண்டும் இந்த நெருக்கத்தில்

 

 
இந்த கோள்களைப் பார்க்க 2080 வரை காத்திருக்க வேண்டும்.

Post a Comment

புதியது பழையவை